Thursday, January 20, 2005

குமுதம் : ரஜினி அப்படியே இருக்கிறார்!



‘‘சந்திரமுகி படத்தின் வேலைகள் ரொம்ப வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. ரஜினியைப் பொறுத்தவரை உற்சாகமாக முழு ஈடுபாட்டுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். தினமும் அவர்தான் எங்கள் எல்லோருக்கும் முன்பாக லொக்கேஷனுக்குப் போய் காத்துக் கொண்டிருப்பார். ஆனால் ஜோதிகா, ரஜினிக்கு முன்னால் மேக்கப்புடன் லொக்கேஷனில் தயாராக இருக்கிறார். என்னோட இத்தனை வருட அனுபவத்தில் இதுபோல் ஒரு சின்சியரான நடிகையை நான் பார்த்ததில்லை. ரியலி சூப்பர்ப். ஒவ்வொரு முறையும் நடித்து முடித்ததும் ‘நான் நல்லா நடிச்சிருக்கிறேனா, காட்சி நன்றாக வந்திருக்கிறதா? இல்லை ஒன் மோர் டேக் போகலாமா?’ என்று பயபக்தியுடன் கேட்டுக்கொள்கிறார். அதனால்தான் அவரால் நல்ல பெயரெடுக்க முடிந்தது என்று நினைக்கிறேன்’’ என்று உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தார் பிரபு. சந்திரமுகி ஷ¨ட்டிங் இரவு முழுவதும் முடிந்து அதிகாலை வீடு திரும்பியிருந்தார்.

‘‘என் அப்பா நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று படம் பார்க்கும் மக்களிடம் ஓர் எதிர்பார்ப்பை உண்டு பண்ணிவிடுவார். அந்த எதிர்பார்ப்பு கமலுக்கு உண்டு என்று அப்பாவே என்னிடம் சொல்லியிருக்கிறார். அப்பா எப்படி அந்த கேரக்டருக்காக மெனக் கெட்டாரோ அந்த இயல்பு அப்படியே கமலிடம் இருக்கிறது. இதைக் கண்டு நாங்கள் எல்லோருமே ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.


அப்பா ஒருமுறை ராம்குமார் அண்ணனிடம், ‘உங்களை விட அதிகம் என் மடியில் உட்கார்ந்தது கமல்தான். எனக்கு கமலும் ஒரு பிள்ளைதான்’ என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் பெங்களூரில் பிஷப் கார்ட்டன் பாய்ஸ் ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும்போது அங்குள்ள ஹாஸ்டலில்தான் தங்கினோம். கமல் குழந்தை நட்சத்திரமாக அப்பாவுடன் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது அவர் மடியில் ஏறி இறங்கி விளையாடியிருக்கிறார். இந்த பாக்கியம் எங்களுக்கெல்லாம்கூட அவ்வளவாக கிடைக்கவில்லை. காரணம், நாங்கள் குழந்தையாக இருக்கும்பொழுதே அப்பா அம்மாவை விட்டுப் பிரிந்து வெளியூரில் தங்கிப் படிக்கப் போய்விட்டோம். அதனால், கமல் எங்கள் வீட்டில் பிறக்காத மூத்த பிள்ளை. நான் இப்போதும் அவரை அண்ணா என்றுதான் அழைத்துக்கொண்டிருக்கிறேன்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல் என்னை அழைத்து வாய்ப்புக் கொடுத்தார். சந்திரமுகி படத்தில் ரஜினி, ‘பிரபு, நீங்களும் நானும் சேர்ந்து நடிக்கிறோம் என்ன சொல்றீங்க’ என்றார். கரும்பு தின்னக் கூலி வேண்டுமா என்று அவரிடமே சொன்னேன்.

ரஜினி மீது அப்பாவுக்கு மரியாதை, பாசம் எல்லாம் உண்டு. ரஜினியைப் பற்றி அவர் எப்போது பேசினாலும் உழைப்பால் உயர்ந்திருக்கிறார். எதிலும் அவரிடம் வைராக்கியமும், ஈடுபாடும் செவ்வனே இருக்கிறது. அதனால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பலமுறை ஒருதீர்க்கதரிசி போல் சொல்லியிருக்கிறார். ‘படையப்பா’ படப்பிடிப்பின்போது அப்பாவுக்கு முன்பே சீக்கிரமே லொக்கேஷனுக்கு போய்விடுவார் அப்பா. இதைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார். இப்போதும் ரஜினி அப்படியே இருக்கிறார். அவருக்கு இருக்கும் பெயருக்கும், புகழுக்கும் இது அவசியமில்லை. அவர் எப்போது வந்தாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.


சிவாஜி புரொடக்ஷனில் இதற்கு முன்பு ‘மன்னன்’ படத்தில் ரஜினி நடித்தார். அப்போது என்னிடம், ‘மன்னன் படம் நன்றாக ஓடினால் இன்னொரு படம் நிச்சயம் உங்கள் பேனருக்கு செய்வேன்’ என்றார். மன்னன் படம் நன்றாக ஓடியது. அதனால், அப்போது சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பதினெட்டு வருடம் கழித்து ‘சந்திர முகி படத்தைத் தயாரியுங்கள். அதில் நான் நடிக்கிறேன்’ என்று சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றியிருக்கிறார். அதுதான் ரஜினி.

என்னை ‘புரொடியூசர் சார்’ என்று அழைத்து முதுகில் தட்டி கிண்டல் செய்து லொக்கேஷனில் ஜாலியாக இருப்பார். அவரிடம் ஹியூமர் சென்ஸ் நிறைய உண்டு. அது அவரிடம் பழகியவருக்கு மட்டுமே தெரியும்.

ரஜினி சமீபத்தில் என்னிடம் என் அம்மாவைப் பற்றி பேசும்போது அம்மாவின் நெற்றியில் பெரிய பொட்டு இருக்கும். ‘முகத்தில் சிரிப்பும், நல்ல உபசரிப்பையும் பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு இந்த களையான முகத்தில் பொட்டு இல்லாமல் இருப்பதைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது’ என்றார். அந்த அளவுக்கு எங்கள் குடும்பத்துடன் ரொம்ப நெருக்கமாகப் பழகியிருக்கிறார். இந்த நட்பு கிடைத்தது, அவர் சிவாஜி புரொடக்ஷனுக்கு படம் பண்ணுவது எல்லாம் நாங்கள் செய்த அதிர்ஷ்டம்.’’ என்று முடித்தார் பிரபு.

_ சந்துரு
படங்கள்: சந்திரமுகி படத்திலிருந்து.

No comments: