Friday, January 14, 2005

தினமலர் : சந்திரமுகி ஸ்பெஷல்

சந்திரமுகி ஸ்பெஷல்

சந்திரமுகி தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரஜினி நடிக்கும் படம். சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டம் முடிவடைந்து இம்மாதம் 15ம் தேதி முதல் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இதற்காக ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணி ஐந்து பிரமாண்டமான செட்டுக்களை போட்டுள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது.

* சந்திரமுகி படத்திற்காக இதுவரை மூன்று பாடல்கள் வித்யாசாகர் இசையில் ரிக்கார்ட் செய்யப்பட்டு மூன்று பாடல்களும் படப்பிடிப்பும் செய்யப்பட்டுவிட்டது. இந்த மூன்று பாடல்கள் முறையே வாலி, பா.விஜய், நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதி உள்ளனர். இந்த மூன்று பாடல்களை நடன அமைப்பாளர்கள் ராஜி சுந்தரம், பிருந்தா, தருண்குமார் ஆகியோர் அமைத்துள்ளனர். இதில் ஒரு பாடல் பெங்களூரிலும் மற்ற இரு பாடல்கள் மைசூர் அவுட்டோரிலும் படமாக்கப்பட்டது.

* சந்திரமுகி படத்தின் சண்டைக் காட்சிகள் சிவாஜி கார்டன் மற்றும் கும்மிடிப்பூண்டி அருகில் படமாக்கப்பட்டது. படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் மிகவும் சிரமமான காட்சிகளை அமைத்திருந்தார். விஜய், ஆந்திர நடிகர் மகேஷ்பாபு ஆகியோர் மட்டுமே செய்யும் கஷ்டமான காட்சிகளை டூப் இல்லாமல் ரஜினி செய்தாராம்.

* அந்தரத்தில் கம்பியில் தொங்குவது அதிலேயே பலமுறை சுற்றுவது போன்ற காட்சிகளில் ரஜினி கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்தாராம். இதைப் பார்த்த தயாரிப்பாளர் ராம்குமார் பதறி போய் ரஜினியிடம், "சார் டூப் போட்டுக் கொள்ளலாம்' என்று சொல்லியும் ரஜினி அன்புடன் மறுத்து விட்டார்.

* ரஜினியுடன் நடிக்க சண்டை நடிகர்கள் மூன்றாவது தலைமுறையை சேர்ந்தவர்களாம். இதில் சிவாஜிக்கு சண்டையில் குருக்களான ஸ்டண்ட் சோமு, சாரங்கன் ஆகியோர் பேரன்கள் நடிக்கின்றனர்.

* திட்டமிட்டு செயல்படுவதில் வாசுவுக்கு இணை வாசு தான். விடியற்காலை மூன்று மணி வரை படப்பிடிப்பு நடத்தி விட்டு காலை 9 மணிக்கு சிவாஜி பிலிம்ஸ் எடிட்டிங் கிற்கு அவர் வீட்டிலிருந்து நடந்தே வந்து விடுகிறார்.

* ரஜினியைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையை செய்கிறாராம். ஒவ்வொரு "ஷாட்' முடிந்ததும் டைரக்டரிடம் வந்து "ஓகே'வா இன்னும் கொஞ்சம் பெட்டரா செய்யவா என்று ஒரு புதுமுகம் கேட்டது போல் ஆவலாக கேட்கிறார். இதை படப்பிடிப்பில் உள்ள அனைவரும் சொல்லி பெருமைப்படுகின்றனர். மூன்று வருட இடைவெளியில் இவர் கொஞ்சம் கூட சோர்ந்து போகவில்லை என்று கூறுகின்றனர்.

* பிரபுவை பொறுத்தவரை இந்தப் படத்தில் ரஜினியின் உயிர் நண்பன். படத்தில் மட்டுமல்ல. இவருக்கு படப் பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட ரஜினியுடனேயே இருக்கிறார். குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் அவர் ரஜினி பக்கத்திலேயே இருக்கிறார்.

* சந்திரமுகி படத்திற்கு ராயப்பேட்டையில் உள்ள சிவாஜி பிலிம்சில் ஒரு எடிட்டிங் சூட் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு நடந்த அன்றே அதன் எடிட்டிங் வேலை நடைபெறுகிறது. இதற்காக, சிவாஜி பிலிம்ஸ் இரவு பகல் இரண்டு நேரமும் விழாக் கோலமாக உள்ளது.

* சந்திரமுகி அனைத்து ஏரியாவும் அப்போதே விற்று விட்டது. அனைத்து வினியோகஸ்தர்களும் பொங்கலுக்கு சந்திரமுகி புளோஅப் கேட்டு அலைந்து கொண்டிருக்கின்றனர். அத்தனை பேரும் சென்னைக்கு வந்து படப்பிடிப்பை ஆவலுடன் பார்க்கின்றனர். ஏப்ரல் 14க்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

* சந்திரமுகி மலையாளத்தில் வந்தது, கன்னடத்தில் வந்தது என்று பல பேர் பல வகையில் பேசிக் கொண்டாலும் தமிழில் முழுக்க முழுக்க கதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாம். ரஜினிக்கு பல நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் புகுத்தப் பட்டுள்ளதாம். தாய்மார்கள் அனைவரும் தியேட்டருக்கு வந்து பார்க்கும் வகையில் தாய்குலத்திற்கேற்றார் போல் படம் அமைந்துள்ளதாம்.

* சந்திரமுகியில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. ரஜினி, பிரபு, நாசர், வடிவேலு, விஜயகுமார், வினித், அவினாஷ், சோனுசுத், ஜோதிகா, நயன்தாரா, ஷீலா, மாளவிகா, கே.ஆர்.விஜயா, சுவர்ணா, வினயா பிரசாத் இன்னும் பலர் நடிக்கின்றனர்.

* ஒளிப்பதிவு: சேகர் பால், எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ், கலை: தோட்டா தரணி, சண்டைப் பயிற்சி: தளபதி தினேஷ். பாடல்கள்: வாலி, பா.விஜய், நா.முத்துக்குமார், நடனம்: ராஜி சுந்தரம், பிருந்தா, தருண்குமார்.

* சிவாஜி பிலிம்ஸ் சார்பாக ராம்குமார் பெரும் செலவில் தயாரிக்கும் சந்திரமுகியில் சிவாஜி குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை துஷ்யந்த். இந்தப் படத்தின் மூன்று தயாரிப்பு மேற் பார்வையும் பார்க்கிறார். தினமும் படப்பிடிப்பு சம்பந்தமானதை தனது பாட்டியிடம் வந்து கூறுகிறார். தாத்தா இருந்தால் தாத்தாவிடமே சொல்வேன் என்று கண் கலங்குகிறார் இந்த ஜூனியர் சிவாஜி.

* வரும் தமிழ்ப் புத்தாண்டு தமிழ் ரசிகர் பெருமக்களுக்கு கொள்ளை விருந்து தான்.

சந்திரமுகியில் பா.விஜய் பாடல்:

பல்லவி1

அத்திந்தோம்

திம்தீம்தோம் தன

திந்தாதிருந்தோம்!

ககதிந்தோம்

திம்தீம்தோம் தன

திந்தாதினந்தோம்

ஆடாத ஜவ்வாது மலை

ஆடிடும் பொம்மி!

ஆண்டவன தாலாட்டும் இசை

கேளடி பொம்மி!

எம்பாட்டு வந்தாலே மனம்

துள்ளிடும் பொம்மி?

அவன் பாட்டு இல்லாத இடம்

எங்கடி பொம்மி?

முக்கண்ணன்

முத்தாக தந்த

பாட்டுப் படிச்சேன்!

பாட்டிலே

பல கோடி நெஞ்ச

நானும் புடிச்சேன்!

சரணம்1

வட்ட வட்ட

மொட்டுகளைத்

தட்ட தட்ட

வந்ததம்மா

நதிக்காத்து! ஓ..

மொட்டு மொட்டு

மெல்ல மெல்ல

மெட்டு மெட்டு

கட்டுதம்மா

சுதி பாத்து! ஓ..

சுதி பாத்து

ஆட வைக்கணும் பாட்டு சும்மா

அசைய வைக்கணும் பாட்டு!

கேட்க வைக்கணும் பாட்டு நல்லா

கெறங்க வைக்கணும் பாட்டு!

இந்த பாட்டுச் சத்தம்

கேட்டு சுத்தும்

பூமி எப்போதும்!

சரணம்2

சின்னச் சின்ன

தொட்டில் கட்டி

அம்மா சொல்லும்

ஆராரிரோ

இசை தானே! ஓ

இசை தானே!

ஆணும் பொண்ணும்

கட்டில் கட்டி

ஆச மெட்டுக்

கட்டுறதும்

இசை தானே!ஓ

இசை தானே!

ஆறு மனமே ஆறுஇங்க

அனைத்தும் அறிந்த தாரு?

அறிவைத் திறந்து பாரு அதில்

இல்லாதத சேரு!

அட எல்லாந் தெரிஞ்ச

எல்லாம் அறிஞ்ச

ஆளே இல்லையம்மா...


Courtesy : http://www.dinamalar.com/cinema/cine_news.asp

No comments: