Tuesday, February 08, 2005

விகடன் : டாடா இன்டிகாம் சந்திரமுகி விளம்பரம்

சந்திரமுகி படத்தின் பாடல் கேசட் சென்னையில் மார்ச் 5ம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் ராம்குமார் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்த் திரையுலக ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘சந்திரமுகி’ திரைப்படத்தை செய்வதற்கு டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் நிறுவனமும், சந்திரமுகி திரைப்படத்தை தயாரித்துவரும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் கூட்டு சேர்ந்துள்ளன.



இனி இத்திரைப்படத்திற்கு ‘‘டாடா இன்டிகாம் மற்றும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் சந்திரமுகி’’ என விளம்பரம் செய்யப்படும், இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்வதற்கு என தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமான கட்அவுட்கள், விளம்பரப் பலகைகள், பேனர்கள் முதலியன வைக்கப்படும். இதற்கென டாடா இன்டிகாம் சந்தாதாரர்களுக்கு திரைப்படத்திலிருந்து துண்டு காட்சிகள் பிரத்யேகமாக கிடைக்கச் செய்யப்படுகிறது.

.

‘சந்திரமுகி’ திரைப்படத் தயாரிப்பாளர் ராம்குமார் கூறுகையில், ‘‘இவ்வாறு கூட்டுச்சேர்வது, தமிழ்த்திரைப்படத்துறையில் புதிய முயற்சியாகும். இந்த உறவு இரு தரப்பினருக்கும் நன்மைபயப்பதாக இருக்கும், இந்திய வரலாற்றில் மிகவும் புகழ்வாய்ந்த நிறுவனத்துடன் கூட்டுச்சேர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

சந்திரமுகி படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ராம்குமார் டைரக்டர் பி.வாசு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது,

சந்திரமுகி படம் முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் படம். டாட்டா இன்டிகாம் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருப்பது விளம்பர விஷயத்தில் எங்களுக்கு பெரிய பக்கப்பலமாக இருக்கும். மார்ச் 5ம் தேதி சந்திரமுகி படத்தின் பாடல் கேசட்டுகள் வெளியிடப்படும். ரஜினி, பிரபு உள்ளிட்ட நடிகர்கள் விழாவில் கலந்துகொள்வார்கள்.

சிவாஜி புரொடக்ஷன் சார்பாக ரொம்ப வருஷங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட அமர்தீப் படத்தில் ஆஷா போஸ்லே பாடினார். இப்போது சந்திரமுகி படத்தில் அவர் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவரை வைத்துத்தான் சந்திரமுகி படத்தின் பாடல் கேசட் வெளியிடப்படுகிறது. படத்தில் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரிதான் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. படத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது இப்போது தெரியாது. இப்போதே தொகையை சொல்லிவிட்டால் பயந்துவிடுவீர்கள். ஏப்ரல் 14ல் தமிழ்ப்புத்தாண்டு அன்று சந்திரமுகி திரைக்கு வருகிறது. அப்போது படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று சொல்கிறோம்.

சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. 3 பாடல்கள் மட்டுமே சூட்டிங் செய்ய வேண்டும். இந்த 3 பாடல்களையும் வெளிநாட்டில் படம்பிடிக்கலாமா என யோசனை செய்துகொண்டிருக்கிறோம். படத்தில் மொத்தம் 5 பாடல்கள். படப்பிடிப்பை 125 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் 75 நாட்களுக்குள்ளேயே படம் முடிந்துவிடும். சந்திரமுகி பற்றிய இன்னும் நிறைய தகவல்களை 16ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவிக்கிறோம்.

No comments: