Thursday, September 30, 2004

ரஜினியின் "சந்திரமுகி" ரகசியம்!

ரஜினியின் "சந்திரமுகி" ரகசியம்!

சிவாஜி ஃபிலிம்ஸில் ரஜினி நடிக்கிறார் என்றதுமே ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையுலகிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது.

சிவாஜி ஃபிலிம்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரிக்க, திரைக்கதை, வசனம் எழுதி பி. வாசு இயக்க, ரஜினி நடிக்கும் அந்தப் படத்துக்குப் பெயர் "சந்திரமுகி".

"சந்திரமுகி" யைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் ஜக்குபாய் கதி என்னாச்சு என்று பார்க்கலாமா?

பாமக தலைவர் ராமதாசுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாமகவைத் தோற்கடிக்க தனது ரசிகர்கள் ஒரு உத்வேகத்தோடு செயல்பட வேண்டும் என்பதற்காக அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட அறிவிப்புதான் ஜக்குபாய்.

கதை என்கிற ஒன்றை தயார் செய்யாமலே ஜக்குபாய் வளர முடியாமல் போனது. டைரக்டர் கே.எஸ். ரவிக்குமாருக்கு சம்பள அட்வான்சாக இருபது லட்ச ரூபாய் தந்திருக்கிறார் ரஜினி.

தொடர்ந்து கதை விவாதம் நடந்து கொண்டிருந்தாலும், திருப்தி இல்லாமலே இருக்கிறது. இதற்கிடையே டைரக்டர் தரணியை கூப்பிட்டு ரஜினி கதை கேட்டதும், ஜக்குவில் கமிட் ஆகிவிட்டதால் கமலின் படத்தை (வசூல்ராஜா) இயக்க முடியாமல் போனதும் ரவிக்குமாருக்கு டென்ஷனையே உண்டு பண்ணியது.

இந்த நிலையில் ரவிக்குமாரை கூப்பிட்டுப்பேசிய ரஜினி... நான் பி. வாசு டைரக்ஷனில் ஒரு படம் பண்ணப் போகிறேன். அதற்குள் நல்ல கதையை ரெடி பண்ணிவிடுங்கள். சந்திரமுகி வெளியாகும் ஏப்ரல் 14ல் உங்களுடைய காம்பினேஷனில் ஒரு படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவோம். ஜக்குபாய் பெயரை விட்டுவிட்டுவேறு பெயரில் அந்தப் படத்தைப் பண்ணலாம் எனச் சொல்லிவிட்டார் ரஜினி.

ஆக... ஜக்குபாய் கைவிடப்பட்டாலும் ரஜினி - கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் ஒரு படம் வருவது நிச்சயம்!

இனி சந்திரமுகி உருவான கதையை பார்ப்போமா?

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடிய மணிச்சித்ரதாழ் மோகன்லால் - சுரேஷ்கோபி - ஷோபனா நடித்த படம் அது! இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஷோபனாவிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

காதல் கிசுகிசு படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே "மணிச்சித்ரதாழ்" படத்தின் கதையை வலதுகை, ஆறாவது விரல், புண்ணியவான் என சில தலைப்புகளில் தேர்வு செய்து விஜயகாந்திடம் சொன்னார் பி.வாசு. ஏற்கனவே நூறாவது நாள், ஊமை விழிகள் உட்பட துப்பறியும் படங்களில் விஜயகாந்த் சிறப்பாக நடித்திருந்ததால் அதே மாதிரியான துப்பறியும் அம்சம் கொண்ட இந்தக் கதையை விஜயகாந்திடம் சொன்னார் வாசு.

ஆனால் இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருக்கிறது என்று தவிர்த்துவிட்டார் விஜயகாந்த்! அதன்பிறகு ஆப்தமித்ரா என்ற பெயரில் இந்தக் கதையை கன்னடத்தில் பண்ணினார் பி. வாசு.

விஷ்ணுவர்த்தன் - ரமேஷ்அரவிந்த் - சௌந்தர்யா நடித்தனர். இதுதான் சௌந்தர்யா நடித்த கடைசிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் பெங்களூரில் தங்யிருந்த ரஜினி இந்தப் படத்தைப் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

பல வருங்களாகவே சொந்தப் படம் எடுத்து வரும் ரஜினி இப்போது சிவாஜி ஃபிலிம்சிற்காக நடிக்க ஒப்புக் கொண்டது எப்படி?

சிவாஜி ஃபிலிம்ஸ் சார்பில் பிரபு தயாரிக்க ரஜினி - பி. வாசு கூட்டணியில் வந்த "மன்னன்" படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. வெறும் நடிகராக மட்டுமே இருந்த ரஜினி மன்னன் படத்தின் சம்பளத்திற்கு வட, தென் ஆற்காடு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அடங்கிய என்.எஸ்.சி. ஏரியா விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு விநியோகஸ்தராகவும் ஆனார் என்று குறிப்பிடத்தக்கது.

"படையப்பா" படத்தின்போது யார் யாரோ கோடி சம்பளம் வாங்குறாங்க. நடிகர்களுக்கே திலகம் நீங்க. இந்தாங்க ஒரு கோடி ரூபாய் என சிவாஜிக்கு சம்பளம் கொடுத்தார் ரஜினி. இதில் நெகிழ்ந்து போன சிவாஜி மன்னன் மாதிரி இன்னொரு படம் எங்க பேனருக்கு பண்ணிக் கொடுப்பா என ரஜினியிடம் சொல்லியிருந்தார். சமயம் வரும்போது நிச்சயம் பண்ணுவேன் என ரஜினியும் சொல்லியிருந்தார்.

சிவாஜி மறைவுக்குப் பின் அவரின் முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ள அன்னை இல்லம் போயிருந்தார் ரஜினி. அப்போது 2004ல் சிவாஜி ஃபிலிம்ஸின் பொன்விழா எனச் சொல்லிய சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் எங்களுக்கு ஒருபடம் பண்ணித்தரணும் என கேட்டுக் கொண்டார்.

சிரித்தபடியே போய்விட்டார் ரஜினி. அந்த சிரிப்புக்கு அர்த்தம் இப்போது தெரிந்திருக்கிறது.

குருவாயூர் கோவிலில் குடும்பத்தோடு சாமி கும்பிடப் போயிருந்த பி. வாசுவின் செல்போன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசினால் எதிர்முனையில் ராம்குமார்.

"ஆப்தமித்ரா" படம் ரஜினி சாருக்கு பிடித்துவிட்டது. சிவாஜி ஃபிலிம்ஸ் பேனரிலேயே தயாரிக்க ஒப்புக் கொண்டுவிட்டார். உடனே கிளம்பிவாங்க.

சந்தோஷத்தில் பறந்து வந்தார் பி. வாசு. ரஜினியை சந்தித்தார். மளமளவென வேலைகள் ஆரம்பமாகியது.

ரஜினியும், பிரபுவும் குருசிஷ்யன், தர்மத்தின் தலைவன் படங்களில் சேர்ந்து நடித்து கலக்கியிருக்கிறார்கள். "சந்திரமுகி" படம் மூலம் மீண்டும் கலக்கப்போகிறார்கள்.

Courtesy : Webulagam.com
http://www.webulagam.com/cinema/cinenews/0409/29/1040929006_1.htm

1 comment:

Anonymous said...

Plz GoD!! No SImRan In ChandramUki Or Jaggubai