சந்திரமுகியை அடுத்து மளமளவென்று இந்தி சந்திரமுகியை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார் டைரக்டர் பி.வாசு. சந்திரமுகி அனுபவங்களை நம்மிடம் மனம் விட்டுப் பேசியபோது :
சந்திரமுகி பண்றதுக்கு முன்னாடி என்ன படமே பண்ண மாட்டேங்கிறீங்கன்னு ரஜினியை கேட்டேன். அவர் சொன்ன ஒரே பதில் என்னங்க, எத்தனை தடவை பாட்ஷா பண்றது. இனி என்ன செய்ய இருக்கு. ஜனங்க ரொம்ப நினைக்கிறாங்க. என்றுதான்.
படத்தில் வருகிற ராஜா கேரக்டரை இன்னும் ஒரு ரீல் வருகிற மாதிரி வைச்சிருந்தேன். அப்பத்தான் நச் சென்று ஒரு கேள்வி கேட்டார் ரஜினி. நல்லாயிருக்கு, இதை மனசில் வைச்சுக்கிட்டு கடைசியாகச் சந்திரமுகியாக வருகிற ஜோதிகாவை மறந்திட்டால் என்னாகும்? என்றார். மில்லியன் டாலர் கேள்வி. நிச்சயமாக ராஜா கேரக்டர்தான் மனசில் நிற்கும். கடைசியில் க்ளைமேக்ஸ் தப்பாகப் போயிருக்கும். இதுமாதிரி நிறைய ட்யூன் ஆச்சு.
அவர் சந்திரமுகியை முழுசாக நம்பினார். டபுள் பாஸிட்டிவ் பார்த்திட்டு அவர் சொன்ன முதல் வார்த்தை இது டபுள் பாட்ஷா!
நானே ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன். எனக்கு ரொம்பவும் பிடிச்ச படம் பாட்ஷா. அது ஒரு பக்கா கமர்ஷியல். மகா ஆக்ஷன். இதை இவர் டபுள் பாட்ஷான்னு சொல்றாரேன்னு தோணியது.
இந்தப் படத்தில் நான் ரொம்பவும் நம்பியது பெண்கள். ரஜினி சார் இந்தக் கதையை பார்த்தால் பெண்கள் டி.வி. பெட்டியை மறந்துவிட்டு வருவார்கள் என்று நம்பினார். அதுதான் நடந்தது.
ரஜினிக்கு எத்தனை சீனில் வர்றோம் என்பது தேவையில்லை. என்ன சீனில் வர்றோம் என்பதைத்தான் பார்ப்பார். இந்தக் காமெடி தூக்கப்போகுது. பாடல்கள் பரவசப்படுத்தப் போகுது என்றெல்லாம் முன்னாடியே சொல்லிட்டார். ராஜா கெட்அப் பற்றி என்கிட்டே சொல்லவே இல்லை. அரைமணி நேரம் பொறுங்க வாசு என்று சொல்லிட்டுப் போனவர், அவராக விக் தேர்ந்தெடுத்து, ட்ரெஸ் பொருத்தமாக அமைந்து வெளியே வந்தார். எனக்கே அவரை லவ் பண்ணனும் போல ஆகிப்போச்சு. லகலகலகன்னு அவர் முதலில் உச்சரித்த விதத்தை பார்த்ததும் இது இன்னொரு ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரின்னு தெரிந்துவிட்டது.
ரஜினியின் பெருந்தன்மையே அவரது முதல். அவர் வாசுவின் சந்திரமுகி, ரஜினியின் சந்திரமுகி என்றுதான் சொல்வார். இந்தப்படம் அவருக்கு நல்லா அமையணும் என்று எல்லோரும் விரும்பினார்கள். மியூசிக் டைரக்டர் வித்யாசாகர் ஒரு சிக்னலில் வண்டியில் நின்றிருக்கிறார். பக்கத்தில் பளபளன்னு ஒரு வண்டி வந்து நிற்கிறதாம். வண்டி ஓட்டிய கனவான், கார் கண்ணாடி ஜன்னலை இறக்கி நல்லா சூப்பர் பாட்டாக போட்டுட்டீங்க தலைவருக்கு என்று சொல்லிவிட்டு போனாராம். ஆடிப்போயிட்டேன் சார்ன்னு என்கிட்டே வித்யாசாகர் சொன்னார்.
சக்ஸஸ§க்குப் பின்னாடி ஒரு மனிதரைப் பார்த்தால் கம்பீரமாக இருக்கும். ஒரு மிடுக்கு வரும். இவரைப் பாருங்க, கருப்பு வேஷ்டியும், சாதாரண சட்டையும், ஹவாய் ரப்பர் செருப்பும் போட்டுக்கிட்டு எப்படி இருக்கிறார் பாருங்க. கண்திருஷ்டி படுமா சொல்லுங்க!
ரிஷிகேஷ் போறதுக்கு முன்னாடி என் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டு முகப்பே மலர்ந்த மாதிரி ஆகிவிட்டது. இங்கே வாங்க ஒரு ரகசிய செய்தி சொல்லணும் என்று என் மனைவியை அழைத்தார். சந்திரமுகி வெற்றி வாசுவோடது. என்னோடது இல்லை.. என் கையில் ஒண்ணும் இல்லை என்று அவரது அமோகமான ஸ்டைலில் உதறிஉதறி சொன்னார். என் மனைவி கண்களில் நீர் பெருகி விட்டது. போன தடவை ரிஷிகேஷ் போகும்போது அவ்வளவாக நிம்மதி இல்லை. இப்போ நிம்மதியாகப் போறேன். வாசு நீங்க நல்லாயிருக்கணும் என்று சொல்லிட்டுப் போனார். இறங்கி தடதடவென்று அவர் காரில் ஏறி, மறையும் வரை கை அசைத்தபோது தமிழ் சினிமா வாழ அவர் நன்றாக இருக்கவேண்டும் என்று தோன்றியது.
_ நா. கதிர்வேலன்
படங்கள் : சித்ராமணி
படங்கள் : சித்ராமணி
Source : Kumudam
Yahoo! Mail
Stay connected, organized, and protected. Take the tour
No comments:
Post a Comment