ரஜினியின் புதிய படத் தொடக்க விழா, கமல் தலைமையில் நடைபெற உள்ளது.
பல்வேறு விழாக்களில் ரஜினி, கமல் சேர்ந்து பங்கேற்பதுண்டு. ஒருவரின் பட விழாவின்போது மற்றொருவர் கலந்து கொள்வதும் உண்டு. கடைசியாக "ஹேராம்' பட விழாவுக்கு ரஜினி வந்திருந்தார்.
ஆனால் அந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதிதான் தலைமை. ரஜினியின் படத் தொடக்க விழாவுக்கு கமல் தலைமை தாங்குவது கோலிவுட் வட்டாரத்தில் மகிழ்ச்சியையும் அதே சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காரணம், இருவரும் பெரிய நடிகர்கள். ஒருவர் விழாவுக்கு இன்னொருவரை தலைமை ஏற்க அழைக்கும்போது ரசிகர்களிடையே சலசலப்பு, ஈகோ பிரச்சினை ஏற்படலாம் என்றுதான் இந்த நடிகர்களின் தரப்பிலிருந்து கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது கமல் தலைமையில் விழா நடக்க உள்ளது.
இதற்கு கமல் ஒத்துக் கொள்ள காரணம், சிவாஜிதான். ரஜினி நடிக்கும் "சந்திரமுகி', சிவாஜி புரொடக்ஷன்ஸ் படம். இதன் தொடக்க விழா அக்.1-ல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
சிவாஜியை தந்தையாக மதிக்கும், அவரது குடும்பத்தை தனது குடும்பமாக நினைக்கும் கமல்தான் இவ்விழாவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது பிரபுவின் அவா. பிரபுவின் இந்த முடிவுக்கு சூப்பர் ஸ்டாரும் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
"அக். 1-ம் தேதி அப்பாவின் பிறந்த நாளும் வருவதால் நீங்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்' என பிரபு கூற, மறுப்பேதும் கூறாமல் "ஓகே' சொல்லியிருக்கிறார் கமல்.
அன்று (அக்.1) மாலை சிவாஜி குடும்பத்தினர், சென்னை மியூசிக் அகாதெமியில் சிவாஜி பிறந்த நாள் விழாவையும் பிரமாண்டமாக நடத்துகின்றனர். அதிலும் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மத்திய அமைச்சர் சுனீல் தத் தலைமையேற்கிறார்.
"சந்திரமுகி படத்துக்கான நாயகி தேர்வு நடந்த பின் தொடக்க விழா நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. விழா தள்ளிப் போடப்பட்டாலும் அதில் கமல் தலைமை தாங்குவார்' என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
Coutesy : Dinamani
No comments:
Post a Comment